பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சேலம் ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாநில செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் திருமுருகன், செயலாளர் முருகேசன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.
‘டாஸ்மாக் நிறுவனத்தில் 18 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 27 ஆயிரம் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும். கரோனாவால் உயிரிழந்த பணியாளர்களுக்கு நிவாரண நிதி, வாரிசுகளுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, பாரதிய டாஸ்மாக் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், மாநில செயல் தலைவர் மகாலிங்கம், மாநில நிர்வாகிகள் பாலசுப்ரமணியம், ஏழுமலை, மாவட்ட நிர்வாகி ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.