சேலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தலைமை ஆசிரியர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர்.
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள நெடுஞ்சாலை நகரில் வசித்து வருபவர் வெங்கடேசன் (50). இவர் ஆத்தூர் அருகே கருமந்துறையில் உண்டு உறைவிடப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் பேரில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை (6-ம் தேதி) சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி கிருஷ்ணராஜ், காவல் ஆய்வாளர் நரேந்திரன் மற்றும் போலீஸார் நெடுஞ்சாலை நகரில் உள்ள வெங்கடேசன் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் இருந்த வெங்கடேசன், அவரது மனைவி ரம்யாவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றி, அது சம்பந்தமாக விசாரணை செய்து வருகின்றனர்.
சோதனை குறித்து போலீஸார் கூறும்போது, வெங்கடேசன் பலருக்கும் அரசு வேலை வாங்கி கொடுப்பதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் மாணவர் விடுதிகளில் சமையலர் பணிக்கு போலி பணி ஆணை வழங்கியதாக 56 பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
இந்த சம்பவத்திலும் வெங்கடேசனுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. தொடர் புகார்களை அடுத்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு, கல்வித்துறை அறிவுறுத்தல் வழங்கியது.
இதனடிப்படையில் மேற் கொள்ளப்பட்ட துறை ரீதியான விசாரணையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து இருப்பது கண்டறியப்பட்டது.தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகின்றனர், என்றனர்.