காவல்துறையில் சேலம் சரக அளவில் நடந்த துப்பாக்கி சுடும் போட்டியில் சேலம் எஸ்பி ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப் பட்டம் வென்றார்.
காவல்துறையினருக்கு ஏற்காடு மலை அடிவாரத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தது. தற்போது, அப்பகுதியில் குடியிருப்புகள் அதிக அளவில் உள்ளதால், நாமமலை அடிவாரப் பகுதியில் காவல்துறையின் துப்பாக்கி சுடும் பயிற்சிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது.
இங்கு நேற்று சேலம் சரக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி நடந்தது. இதில், சேலம் சரக டிஐஜி மகேஸ்வரி, சேலம் மாநகர காவல் ஆணையர் நஜ்மல்ஹோடா, எஸ்பி-க்கள் அபிநவ் (சேலம்), சரோஜா தாகூர் (நாமக்கல்), கலைச்செல்வன் (தருமபுரி), சாய்சரண் தேஜேஸ்வி (கிருஷ்ணகிரி), போச்சம்பள்ளி பட்டாலியன் கமாண்டோ பிரிவு எஸ்பி பாண்டியராஜன், தமிழ்நாடு காவல்துறை கமாண்டோ பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் போட்டியில் பங்கேற்றனர்.
இதில், 30 மற்றும் 50 மீட்டர் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பாக சேலம் எஸ்பி அபிநவ் வென்றார். இவர் மொத்தம் 326 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். 321 புள்ளிகள் பெற்று கிருஷ்ணகிரி எஸ்பி சாய்சரன் தேஜேஸ்வி, இரண்டாமிடம் பிடித்தார். 298 புள்ளிகள் பெற்று மாநகர காவல் ஆணையர் நஜ்முல் ஹோடா 3-ம் இடத்தை பிடித்தார்.
இந்நிகழ்ச்சியில், சேலம் கூடுதல் காவல் துணை ஆணையர் கும்மராஜா, காவல் உதவி ஆணையர் பூபதிராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.