தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில் பிரதான அருவிப் பகுதியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர். 
Regional03

ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு :

செய்திப்பிரிவு

ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி என்ற அளவில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை அளவீட்டின்போது இந்த அளவு விநாடிக்கு 19 ஆயிரம் கனஅடியாக அதிகரித்திருந்தது. பின்னர் மாலை 5 மணி அளவில் மேற்கொண்ட அளவீட்டின்படி விநாடிக்கு 20 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் இருந்து தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீர் மற்றும் தமிழகத்தை நோக்கி வரும் காவிரி ஆற்றின் கரையில் உள்ள வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை ஆகியவற்றால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்ந்துள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 13 ஆயிரத்து 670 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 16 ஆயிரத்து 670 கனஅடியாக அதிகரித்தது.

டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் தேவை குறைந்ததைத் தொடர்ந்து, அணையில் இருந்து விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 650 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 68.55 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று 69.39 அடியானது. நீர் இருப்பு 32.18 டிஎம்சி-யாக உள்ளது.

SCROLL FOR NEXT