தமிழக அளவில் கரோனா பரிசோதனையில் அதிக பரிசோதனைகள் செய்த மருத்துவமனைகளில் சேலம் அரசு மருத்துவமனை ஆய்வகம் 3-ம் இடம் பெற்றுள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து கரோனா பரிசோதனை ஆய்வகம்செயல்பட்டு வருகிறது. இங்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா வைரஸ்உள்ளதா? என்பதைக் கண்டறியப்படுகிறது.
மேலும், பரிசோதனை முடிவுகளை இணையதளம், பரிசோதனை செய்தவரின் செல்போன் எண் ஆகியவற்றுக்கு பகிரப்பட்டு வருகிறது.
சேலம் அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் கடந்த 1-ம் தேதி வரை, 13 லட்சம் பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் தமிழக அளவில் கரோனா பரிசோதனையை அதிக எண்ணிக்கையில் மேற்கொண்ட அரசு மருத்துவமனை ஆய்வகத்தில் 3-வது இடத்தை பெற்றுள்ளது.
இதையடுத்து, ஆய்வக நுண்ணுயிரியல் துறையினர், விடிஆர்எல் ஆராய்ச்சிக் குழுவினர், கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள், வார்டு மேலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் ஆகியோரை பாராட்டி மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி சான்றிதழ் வழங்கினார்.