தமிழக கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்துக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டத்தை தமிழக அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இதை எதிர்த்து ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அரசும், அறநிலையத் துறையும் தலையிடுகிறது. கோயிலில் பூஜை, சடங்குகள்செய்வது மத நம்பிக்கை தொடர்பானது.பழைய மரபுகளையும், சம்பிரதாயங்களையும் மாற்ற அரசு முயற்சிக்கிறது. ‘அன்னைத்தமிழில் அர்ச்சனை’ என்ற திட்டத்தை அரசுஅறிவித்து, பல கோயில்களில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் உள்ள அர்ச்சகர்களை மறைமுகமாக தமிழில் அர்ச்சனை செய்யும்படி வற்புறுத்துவதுபோல உள்ளது.
சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய நடைமுறைகளை அறநிலையத் துறைஅறிமுகம் செய்கிறது. இது சம்பந்தப்பட்ட மதத்தின் சுதந்திரத்தில் குறுக்கிடுவதுபோல உள்ளது. எந்த அதிகாரத்தின் அடிப்படையில் இந்த நடைமுறையை அமல்படுத்துகிறீர்கள் என்று கேட்டு அரசுக்கு மனு அனுப்பினேன். அதற்கு அரசுஉரிய விளக்கம் தரவில்லை. அதனால்கோயிலில் பின்பற்றப்படும் நடைமுறைகளையோ, மரபுகளையோ மாற்றக் கூடாது எனவும் ‘அன்னைத் தமிழில் அர்ச்சனை’ திட்டத்தை வாபஸ் பெறவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோரைக் கொண்ட முதல் அமர்வில் நேற்று விசாரணைக்குவந்தது.
அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன் ஆஜராகி, ‘‘1998-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில் கோயில்களில் சம்ஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கோயில்களில் பின்பற்றப்படும் ஆகம விதிப்படியான நடைமுறைகளை மாற்ற முடியாது. மத விவகாரங்களில் அரசுதலையிடக் கூடாது’’ என்று வாதிட்டார்.
இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், பின்னர் தங்கள் தீர்ப்பில் கூறியதாவது:
கடந்த 2008-ம் ஆண்டு உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘கோயில்களில் எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை. குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு முரணான முடிவை எடுக்க முடியாது. ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்ட விஷயத்தை மறுபரிசீலனை செய்யத் தேவையில்லை. இந்த வழக்கில் எந்தத் தகுதியும் இல்லை என்பதால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.