உதகையில் தலைமையாசிரியரை ஏமாற்றி, அவரது ஏடிஎம் கார்டில்ரூ.49 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கிய 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்தவர் ராஜூ (72). ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். இவர், நேற்று முன்தினம் உதகை ‘ஜி1’ காவல் நிலையம் எதிரே உள்ள ஏடிஎம் மையத்தில் தனது மனைவியின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி தலாரூ.9,000 வீதம் இருமுறை பணம் எடுத்துள்ளார். 3-வது முறையாக பணம் எடுக்க முயன்றபோது பணம் வராததால், அங்கிருந்த இளைஞரிடம் உதவி கேட்டுள்ளார்.
அந்த இளைஞரும் முயற்சி செய்துவிட்டு பணம் வரவில்லை எனக்கூறியுள்ளார். மேலும், ராஜூவின் ஏடிஎம் கார்டுக்கு பதிலாக, தனது கார்டை அந்த இளைஞர் கொடுத்துள்ளார்.
ராஜூ வீட்டுக்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.49 ஆயிரத்துக்கு பொருட்கள் வாங்கியதாக வங்கிக் கணக்கில் இருந்து குறுந்தகவல் வந்துள்ளது. வங்கி அதிகாரிகள் உதவியுடன் ஏடிஎம் கார்டை முடக்கிய ராஜூ, ‘பி1’ காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மர்ம இளைஞர் வழங்கிய கார்டைக் கொண்டு போலீஸார் விசாரணை நடத்தி, இளைஞர்கள் நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸார் கூறும்போது ‘‘ராஜூவின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, உதகையில் உள்ள கடைகளில் ரூ.49 ஆயிரம்மதிப்பில் புதிய துணி, நகைகள் வாங்கியது தெரியவந்தது. தொடர்புடைய ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்புக் கேமராவை ஆய்வு செய்தோம்.
மேலும் ஏடிஎம் கார்டைக் கொண்டு, வங்கியில் விசாரித்த போது, முதியவரை ஏமாற்றிய இளைஞர் கூடலூர் அருகே மேல்கூடலூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவரின் மகன் கபில் (28) என்பது தெரியவந்தது. இதையடுத்து கபிலையும், உடந்தையாக இருந்த அவரது நண்பர்கள் கூடலூரை சேர்ந்த ஸ்டாலின் (23),உதகை பிஷப்டவுன் பகுதியை சேர்ந்த ஆகாஷ் (21), ஹரிஸ் (21) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றனர்.