Regional01

சேலம் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை தாழ்வான பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் :

செய்திப்பிரிவு

சேலத்தில் நேற்று முன்தினம் மதியம் ஆரம்பித்த மழை விடிய விடிய பெய்ததில், தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தும், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்தும் ஓடியதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மதியம் குளிர்ந்த காற்றுடன் லேசாக பெய்யத் தொடங்கிய மழை கன மழையாக நீடித்தது. மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக இடி மின்னலுடன் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது.

மழையால் மாநகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. கிச்சிப்பாளையம், நாராயணன் நகர், பச்சப்பட்டி, காளிதாசர் தெரு, ஆறுமுகம் நகர், அம்மாப்பேட்டை, சூரமங்கலம், அழகாபுரம், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி ஆகிய இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது.

மேலும், சாலைகளில் மழை நீருடன் சாக்கடை கால்வாய் கழிவுகளும் கலந்து சுகாதார சீர் கேட்டை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் நேற்று காலை ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். தாழ்வான பகுதிகளில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றிடும் வகையில் மாநகராட்சி பணியாளர்கள் வரவழைக்கப்பட்டு மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றிட நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும், குமரகிரி ஏரி நிரம்பி வெளியேறும் உபரிநீர் பச்சப்பட்டி ஓடை வழியாக வெள்ளைக்குட்டை ஓடை பகுதியில் திருமணி முத்தாற்றில் கலக்கிறது. தண்ணீர் விரைவாக செல்ல தூர்வாரும் பணி நேற்று நடந்தது. இந்தப் பணியை மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார். மேலும், காளிதாசர் தெருவில் சாலையில் வழிந்தோடும் மழைநீரை வெளியேற்றி பொதுமக்களுக்கு வேண்டிய வசதியினை ஏற்படுத்தி தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

சேலத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு மில்லி மீட்டரில்: சேலம் 92, பெத்தநாயக்கன்பாளையம் 126, ஏற்காடு 78, கரியகோயில் 70, காடையாம்பட்டி 67, ஓமலூர் 59, ஆணைமடுவு 54, ஆத்தூர் 50.2, வீரகனூர் 18, எடப்பாடி 16, சங்ககிரி 1.5 என மாவட்டம் முழுவதும் மழை அளவு பதிவாகியுள்ளது.

SCROLL FOR NEXT