சேலம் மாவட்டத்தில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. முத்திரைத் தாள் விற்பனை இணையதள சர்வர் பிரச்சினையால் இத்தட்டுப்பாடு நிலவுவதாக கருவூலத்துறையினர் தெரிவித்தனர்.
நிலம், வீடு விற்பனை, சொத்து பரிமாற்றம், விற்பனை ஒப்பந்தம், பணம் கொடுக்கல், வாங்கல் உள்ளிட்டவைகளை ஆவணப்படுத்த முத்திரைத் தாள் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, சொத்து கிரையம் போன்றவற்றை சட்டப்படி செய்து, அதனை ஆவணமாக மாற்றிக் கொள்ள, சொத்து மதிப்புக்கேற்ப முத்திரைத் தாள் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பொதுமக்கள் கூறும்போது, “கடந்த சில மாதங்களாக சேலம் மாவட்டத்தில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால், அவற்றை கூடுதல் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அரசு இப்பிரச்சினையில் உரிய கவனம் செலுத்த வேண்டும்” என்றனர்.
முத்திரைத் தாள் விற்பனையாளர்கள் சிலர் கூறும்போது, “அரசு சார்நிலைக் கருவூலங்களில் முத்திரைத் தாள் தேவைக்கான தொகை செலுத்தி விண்ணப்பம் வழங்கினால், மறுநாள் தான் கிடைக்கிறது. மேலும், குறைந்த எண்ணிக்கையே கிடைக்கிறது.
உயர் மதிப்புடைய முத்திரைத் தாள்கள் பல நேரங்களில் இருப்பு இல்லை என்றே தெரிவிக்கின்றனர்” என்றனர்.
இதுதொடர்பாக கருவூலத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
முத்திரைத் தாள் விற்பனைக்கு தேவைப்பட்டியலை இணையதளத்தில் சமர்ப்பித்து பின்னர் வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது.
இந்நிலையில், இணையதள சர்வர் அடிக்கடி முடங்கிவிடுவதால், தாமதம் ஏற்படுகிறது. சர்வர் பிரச்சினை ஒவ்வொரு மாவட்டமாக சீர் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் இப்பிரச்சினை தீர்க்கப்படும்.
உயர் மதிப்புடைய முத்திரைத் தாள்கள் குறைவாக வருவதால், அவற்றை மண்டல அலுவலகங்களில் இருந்து பெற்று வழங்க வேண்டியுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.