விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த தடைக்குப் பதிலாக கட்டுப்பாடு விதிக்கலாம் என சேலத்தில் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துக்கூறும், ‘இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்’ என்ற தலைப்பில் மக்கள் தொடர்பு நிகழ்ச்சி சேலத்தில் நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பாஜக மாநில துணைத் தலைவர் கருப்பு முருகானந்தம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கு பாஜக நிர்வாகிகளை தயார்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிக உறுப்பினர்களை வெற்றிபெற வைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விநாயகர் சதுர்த்தி யன்று வீடுகளில் வழிபாடு நடத்த அரசு அனுமதி தேவையில்லை. பள்ளிகள், கல்லூரிகள், டாஸ்மாக் கடைகள் என அனைத்தும் திறக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு தடை விதிப்பது ஏற்புடையது அல்ல. அரசு கட்டுப்பாடு விதிக்கலாமே தவிர, தடை விதிக்க கூடாது.தமிழகத்தில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த பாஜக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.