திருப்பத்தூர் மாவட்டம் தியாகராஜ சுவாமி நாதஸ்வரம் தவில் இசை கலைக்குழு சார்பில், தவில் இசை கலைக்குழு மாநில மண்டல பொறுப்பாளர் சுதாகர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நாடக கலைஞர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் அமர் குஷ்வாஹாவிடம் கோரிக்கை மனு ஒன்றை அளிக்க வந்தனர்.
அப்போது, ஆட்சியர் இல்லாததால், மாவட்ட வழங்கல் அலுவலர் விஜயனிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது:
நாடக துறையில் பல ஆண்டு களாக கலை சேவை செய்து வரும் பெண் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் வயது வரம்பை 50-ல் இருந்து 40-ஆக தளர்த்த வேண்டும். மாவட்டம் தோறும் தகுதியான நாடக கலைஞர்களை தேர்வு செய்து ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் ‘கலைமாமணி’ விருது வழங்கி கலைஞர்களை கவுரப் படுத்திட வேண்டும்.ஓய்வூதிய தொகையை உயர்த்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தன.
முன்னதாக, கோரிக்கை மனு அளிக்க வந்த நாடக கலைஞர்கள் திருப்பத்தூர் நகர் பகுதியில் மயிலாட்டம், கொக்கிலி ஆட்டம், பொய்க்கால் குதிரை, சிலம்பாட்டம், நாதஸ்வரம், தவில், பறை இசை வாத்தியங்களை வாசித்தபடி ஊர்வலமாக வந்தனர்.