சேலம் மாவட்டத்தில் நேற்று பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிகளில் கரோனா தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய 73 அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று 9 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்கள் பயிலும் 295 அரசுப் பள்ளிகள், 35 நிதியுதவி பெறும் பள்ளிகள், 215 மெட்ரிக், சுயநிதி பள்ளிகள், 50 சிபிஎஸ்இ பள்ளிகள் திறக்கப்பட்டன.
இவற்றில் 92 ஆயிரத்து 397 மாணவர்கள், 90 ஆயிரத்து 985 மாணவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 83 ஆயிரத்து 382 பேர் பயில்கின்றனர். பள்ளிகளில் ஆசிரியர்கள், ஆசிரியரல்லா பணியாளர்கள் உள்ளிட்ட 14 ஆயிரத்து 116 பேர் பணிபுரிந்து வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்சியர் கார்மேகம், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் தேவி, முதன்மை கல்வி அலுவலர் முருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டு, அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்தனர்.
பள்ளிகளில் கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய பல்வேறு துறைகள் சார்ந்த மாவட்ட, வட்டார அளவிலான 73 அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் அரசு கலைக் கல்லூரியில் கரோனா தடுப்பூசி முகாம் அமைத்து மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி போடும் பணியும் நடந்தது.