ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் வாழப்பாடி, ஓமலூர், மற்றும் மேச்சேரியைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பண்ணையத் திட்டத்தின் கீழ் வாழப்பாடி, ஓமலூர் மற்றும் மேச்சேரி வட்டாரங்களில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் கீழ் 300 அலகுகளில் ரூ.1.35 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறையின் மூலம் 300 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு பயனாளியாக இணைக்கப்படுவர். திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் 1 ஹெக்டேர் பரப்பு நில உரிமை உடையவராக இருக்கவேண்டும்.
மேலும், தனது சொந்த செலவில் ரூ.90,000 மதிப்பில் வேளாண்மைத் துறையின் இனங்களான பயிர் செயல் விளக்கத்திடல், தீவன பயிர் சாகுபடி, மரக்கன்றுகள் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இனங்களான 1 கறவை மாடு, 10 ஆடுகள், 15 கோழிகள், தோட்டக்கலைத் துறையின் இனங்களான பழ மரக்கன்றுகள், தேனீ வளர்ப்புப் பெட்டி மற்றும் ஊட்டச்சத்து மிக்க காய்கறித் தோட்டம் போன்றவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு ஒருங்கிணைந்த பண்ணையத்தினை உருவாக்கிய விவசாயிக்கு பின்னேற்பு மானியமாக ரூ.45,000 அவரது வங்கிக் கணக்கில் வழங்கப்படும். எனவே, வாழப்பாடி, ஓமலூர் மற்றும் மேச்சேரி வட்டார விவசாயிகள் அந்த பகுதி வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்துள்ளார்.