சங்கரன்கோவில் கோயில் யானை வசிப்பிடத்துக்கு 2 ஏக்கரில் நந்தவனம் அமைத்து இயற்கை சூழலுடன் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மாநில வனக்குழு உறுப்பினர் அறிவுரை கூறியுள்ளார்.
தமிழகத்தில் கோயில்கள் மற்றும் தனியாரிடம் உள்ள யானைகளின் உடல்நிலை மற்றும் யானைகள் பராமரிக்கப்படும் நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் உள்ள கோமதி யானையை மாநில வனக்குழு உறுப்பினரும் மாநில யானைகள் ஆராய்ச்சியாளருமான மயிலாடுதுறையைச் சேர்ந்த சிவ கணேஷ் ஆய்வு செய்தார்.
யானை 5 நிமிடத்துக்கு ஒரு முறை உட்கொள்ளும் இரையின் அளவு, பாகன் சொல்வதை யானை புரிந்துகொள்ளும் திறன், யானையின் கண், காது, வால், கால் போன்றவற்றின் நிலை, ஆரோக்கியம், யானை தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பரப்பளவு போன்றவை குறித்து ஆய்வு செய்தார்.
யானையின் உடல்நிலை 90 சதவீதம் நன்றாக இருப்பதாகக் கூறிய வனக்குழு உறுப்பினர், யானையை மண் தரையில் கட்ட வேண்டும் என்றும், ஆரோக்கியமாக, இயற்கையான சூழலில் யானை வசிப்பதற்காக 2 ஏக்கர் பரப்பளவில் மரங்களுடன் கூடிய நந்தவனம் அமைத்து, இயற்கை சூழலுடன் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார். யானையை பராமரிக்கும் முறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.