ஆத்தூர் அருகே சொத்து தகராறில் அண்ணனை அரி வாளால் வெட்டிக் கொன்ற தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
ஆத்தூர் அடுத்த மல்லியக்கரை கந்தசாமிபுதூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பெரியசாமி (66). இவரது மனைவி வான்மதி. இவர்கள் இருவரும் மகன் குமாருடன் வசித்து வந்தனர். இவர்களின் வீட்டின் அருகே பெரியசாமியின் தம்பி சடையன் (57) வசித்து வருகிறார்.
சொத்து தகராறு காரணமாக சடையனுக்கும், பெரியசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையில் நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த சடையன் அரிவாளால் பெரியசாமியை வெட்டினார்.பலத்த காயம் அடைந்த பெரியசாமியை மீட்ட அவரது உறவினர்கள் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி பெரியசாமி உயிரிழந்தார்.
இதுதொடர்பாக மல்லியக்கரை இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சடையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.