Regional04

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வெழுத வயது வரம்பை ரத்து செய்ய கோரிக்கை :

செய்திப்பிரிவு

முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர் வெழுத வயது வரம்பு நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று முதுநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுதொடர்பாக முதுநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களின் கூட்டமைப்பினர் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லத்தக்கது என்ற அரசாணையை ஆக.23-ம் தேதி தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் 59 வயது வரை பணியில் சேர முடியும். ஆனால், முதுநிலை ஆசிரியர்கள் தகுதித் தேர்வெழுத வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு 40 என்றும், இதர வகுப்பினர்களுக்கு 45 என்றும் ஜனவரி மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி, முதுநிலை ஆசிரியர் தகுதித் தேர்வை 40 வயதுக்கு அதிகமானோர் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த அரசாணை ரத்து செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்குறுதி அளித்திருந்தார். பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை யின்போது இதுகுறித்து எந்த அறிவிப்பையும் அரசு வெளியிடவில்லை.

எனவே, முதுநிலை ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வெழுத வயது வரம்பு நிர்ணயித்து பிறப்பித்த அரசாணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்பப் பெறுவதுடன், 58 வயது வரை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்றனர்.

SCROLL FOR NEXT