கூட்டுறவு துறை சார்பில், மலைவாழ் மக்களுக்கு ரூ.1.72 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கிய திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி. 
Regional02

மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் மேம்பட - கூட்டுறவு துறை சார்பில் ரூ.1.72 கோடி கடனுதவி : திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி வழங்கினார்

செய்திப்பிரிவு

புதூர்நாடு மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயர கூட்டுறவு சங்கம் மூலம் ரூ. 1 கோடியே 72 லட்சத்துக்கான கடன் உதவிகளை திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி நேற்று வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலையில் புங்கம் பட்டுநாடு, புதூர்நாடு மற்றும் நெல்லிவாசல் நாடு என்ற 3 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி பின்தங்கிய பகுதியாகவே உள்ளது. இங்குள்ள மக்களின் வாழ்வாதாரம் உயர கூட்டுறவு சங்கங்கள் மூலம்பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விவசாய குழுக்களுக்கு கடன் உதவி வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பியிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதேநேரத்தில், விவசாய குழுக்களுக்கு கடனுதவிகளை கூட்டுறவு துறை வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, ஜவ்வாது மலைக்கு உட்பட்ட புதூர்நாடு பகுதியில் பழங்குடியின பெரும் பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 42 விவசாய குழுக்களுக்கு ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பில் கடன் உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி புதூர் நாட்டில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சங்கத்தலைவர் அண்ணாமலை வரவேற்றார். மாவட்ட கூட்டுறவு துணைப் பதிவாளர் முனிராஜ் தலைமை வகித்தார். திருப்பத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் நல்லதம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 72 லட்சம் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

SCROLL FOR NEXT