காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தையும் உடனே அகற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சேலம், வேலூர், கடலூர், கோவை மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. சேலம் மாவட்டத் தலைவர் பெரியசாமி வரவேற்றார். வேலூர் மண்டலத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மண்டல நிர்வாகிகள் வைத்தியலிங்கம், சண்முகம், சந்திரசேகரன், மாநில நிர்வாகி மணி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னையில் சுங்கச்சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. மேலும், பல சுங்கச்சாவடிகள் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதுபோல, தமிழகத்தில் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, உள்ளாட்சி என அனைத்து விதமான இடங்களிலும் கடைகளுக்கு ஒரேமாதிரியான வாடகை உயர்வை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். கடைகளில் பயன்படுத்தப்படும் மின் தராசுகளை 5 ஆண்டுக்கு ஒருமுறை முத்திரையிட வழிவகை செய்ய வேண்டும். வெளி மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் வேளாண் பொருட்களுக்கும் செஸ் வரியை நிறுத்த வேண்டும். நீலகிரியில் அரசுக்கு சொந்தமான 800 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான உற்பத்தி மூலப்பொருட்களை தொடக்க நிலையிலேயே தடை செய்ய வேண்டும்.
வட மாநிலத்தைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் கன்டெய்னர் லாரிகள் மூலம் பான்பராக், குட்கா ஆகியவற்றை கொண்டு வருகின்றனர். அவர்களை கண்டுபிடித்து குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.