சேலம் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் 1,200 களப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் மாநகராட்சி சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தொடர்பான முகாம் நடைபெற்றது. முகாமில், மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:
சேலம் மாநகரப் பகுதியில் பருவமழை காலங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தலா 60 புகை தெளிப்பான் கருவிகள், கை தெளிப்பான் கருவிகள், 4 வாகனங்கள் மூலம் புகை அடித்தல், 60 மலேரியா பணியாளர்கள், கொசுப்புழு உற்பத்தியை கண்டறிந்து அதனை அழிக்கும் 1,200 களப்பணியாளர்கள், 30 பரப்புரையாளர்கள், 30 பயிற்சி ஆய்வாளர்கள் வீடு, வீடாகச் சென்று கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுவர். வீடுகளுக்கு வரும் களப்பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இப்பணிகளை களப்பணியாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், மாநகர நல அலுவலர் யோகானந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன், முதுநிலை பூச்சியியல் மருத்துவர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.