Regional01

காவிரியாற்றில் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு :

செய்திப்பிரிவு

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து விநாடிக்கு 8000 கனஅடியில் இருந்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று முன்தினம் காலை அளவீட்டு நிலவரப்படி விநாடிக்கு 8000 கனஅடி என்ற அளவுக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை முந்தைய நாள் அளவைவிட விநாடிக்கு 6000 கனஅடி அளவுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை அளவீட்டின்போது விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி என்ற அளவில் ஒகேனக்கல் காவிரியில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரும், தமிழகத்தை நோக்கி வரும் காவிரி ஆற்றோர வனப்பகுதிகளில் சில நாட்களாக பெய்து வரும் மழையின் நீரும் இணைந்ததால் ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 11 ஆயிரத்து 456 கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணைக்கு விநாடிக்கு 7 ஆயிரத்து 474 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 11 ஆயிரத்து 456 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 650 கனஅடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 66.06 அடியாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று காலை 66.65 அடியானது. நீர் இருப்பு 29.80 டிஎம்சி-யாக உள்ளது.

SCROLL FOR NEXT