விழுப்புரத்தில் பயனாளிக்கு கடனுதவிக்கான காசோலையினை வழங்கும் மாவட்ட ஆட்சியர் த.மோகன். 
Regional02

விழுப்புரத்தில் தொழில்முனைவோருக்கு ரூ.3.25 கோடி கடனுதவி :

செய்திப்பிரிவு

விழுப்புரம் தெய்வானை மகளிர் கல்லூரியில் நேற்று ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பாக தொழில் முனைவோர் வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் பெற்று சுய தொழில் தொடங்குவது குறித்து விழிப்புணர்வு மற்றும் ஊக்குவிப்பு முகாம் நடந்தது.

விழுப்புரம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தாமோதரன் தலைமை தாங்கினார். இம்முகாமில் கலந்து கொண்டஆட்சியர் த.மோகன் பயனாளிகளுக்கு ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் கடனுதவிக்கான காசோலையினை வழங்கினார். அப்போது அவர் கூறியது:

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் பொருட்டு பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. இளம் தொழில் முனைவோர் தொழில் தொடங்க ஏதுவாக வங்கிகள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கி வருகிறது. நமது மாவட்டத்தில் விவசாயம் மற்றும் சிறுதொழில் சம்பந்தப்பட்ட தொழில்கள் அதிகளவில் உள்ளன. புதிய தொழில் முனைவோர் விவசாயம் சார்ந்த தொழில்களை மேற்கொள்ள முன்வர வேண்டும். பின்தங்கியுள்ள கிராமப்பகுதியினை சார்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் தொழில் முனைவோருக்கான பயிற்சி பெற்று வங்கிகள் மூலம் கடனுதவி பெறலாம். புதிய தொழில் தொடங்கி தங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரவேண்டும்.

அதற்கு வங்கிகளும் விண்ணப் பத்தினை பரிசீலித்து விரைந்து கடனுதவி வழங்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்டசெயல் அலுவலர் ராஜேஷ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஹரிஹரசுதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT