சேலம் மாவட்டத்தில் கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என ஆய்வுக்கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா 3-ம் அலையை எதிர்கொள்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் ஆலின் சுனாஜா, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:
கரோனா பரவலைத் தடுக்க பொதுமக்கள் மற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிகளில் ஈடுபடுவோர் கட்டாயம் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியினை பின்பற்ற வேண்டும். இதை மண்டலம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மீறுவோர் மீது உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அபராதம் வசூலிக்க வேண்டும்.
மேலும், கரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலை பரவாமல் தடுக்க தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் இணை இயக்குநர் (நலப் பணிகள்) நெடுமாறன், துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) நளினி (சேலம்), ஜெமினி (ஆத்தூர்), ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கீதா பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.