Regional02

மனைவியை கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது :

செய்திப்பிரிவு

அவிநாசி வி.எஸ்.வி காலனியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், கணவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

அவிநாசி வி.எஸ்.வி காலனியில் வசித்து வருபவர் விஜயன் (35). பின்னலாடை நிறுவனத்தில் அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பிரியா (30). தம்பதிக்கு 7 மற்றும் 5 வயதில் இரு மகள்கள் உள்ளனர்.

நேற்று முன்தினம் வழக்கம் போல பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டில்தனியாக இருந்த பிரியா கொலை செய்யப்பட்டு கிடந்ததாக கணவர்விஜயன் அவிநாசி போலீஸாரிடம் புகாரளித்தார்.

இதையடுத்து மாவட்ட காவல்கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸார் விசாரித்தனர். அதில்,மனைவியை விஜயனே கொன்றுவிட்டு நாடகமாடியது தெரிய வந்தது.

இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது:

தம்பதிக்கிடையே ஏற்கெனவே கருத்துவேறுபாடு இருந்துள்ளது. நேற்று முன்தினம் வேலைக்கு சென்றிருந்த விஜயன், அலைபேசியில் பிரியாவை தொடர்புகொண்டுள்ளார். அவரை தொடர்பு கொள்ள முடியாததால், பிரியா மீது விஜயனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சப்பாத்தி தேய்க்க பயன்படுத்தும் கட்டையால் பிரியாவை, விஜயன்அடித்துள்ளார்.

இதில், அவர் உயிரிழந்ததால், மர்மநபர்கள் அவரை கொலை செய்துவிட்டு, நகைகளை கொள்ளையடித்தது போன்று விஜயன் நாடகமாடியுள்ளார். இதையடுத்து விஜயன் நேற்று கைது செய்யப்பட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT