Regional01

பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து மறியல் :

செய்திப்பிரிவு

சேலம் அருகே பொது வழிப்பாதை ஆக்கிரமிப்பை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் வீராணம் அடுத்த வளையக்காரனூர் ஊராட்சி சின்னவேலம்பட்டி பகுதியில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நேற்று சின்னவேலம்பட்டியில் இருந்து வீராணம் செல்லும் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:

சின்னவேலம்பட்டியில் இருந்து குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பத்து அடி அகலப்பாதையை பல ஆண்டாக நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், சிலர் திடீரென அப்பாதையை ஆக்கிரமித்து தங்களுக்கு சொந்தமானது என கூறி வருகின்றனர்.

இதனால், அப்பாதையை கடந்து வெளியிடங்களுக்கு நாங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த வீராணம் போலீஸார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், பொது வழிப்பாதை பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT