தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டம் சேதுக்குவாய்த்தான் ஆற்றங்கரை பகுதியில் தோட்டக்கலைத்துறை மூலம் 10 ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்து, மல்லிகை மகளிர் குழுவினர் பனை ஓலை மூலம் தயாரித்த கைவினைப்பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.
பின்னர் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மாவட்டத்தின் அடையாள மாக பனைமரம் உள்ளது. தமிழகத்தில் சுமார் 5 கோடிபனைமரங்கள் இருந்தாலும், அதிகப்படியாக தூத்துக்குடி மாவட்டத்தில் தான் சுமார் 2 கோடி பனை மரங்கள் உள்ளன. தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து மதர் சமூக சேவை நிறுவனம் ஏற்பாட்டில் மாவட்டத்தில் 1 கோடி பனை விதைகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயித்து, இதுவரை 68 லட்சம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன. உடன்குடியில் பனை பொருட்கள் உற்பத்தியாளர்கள் அமைப்பு நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றார்.
தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரஸ்வதி, கூடுதல் தொழில்துறை ஆலோசகர் (ஓய்வு) சண்முகநாதன், ஏரல் வட்டாட்சியர் இசக்கிராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.