திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே செங்குளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன்கள் விகாஸ் (27), விஜய் (26). கடந்த 2016-ம் ஆண்டு அப்பகுதியில் முன்னாள் ஊராட்சி தலைவர் ரவிச்சந்திரன் கொலை வழக்கில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.
கடந்த 22-ம் தேதி ரவிச்சந்திரனின் மகன் சிவபிரவீன் (22), உறவினர் ஜெயமுருகன் (37) ஆகியோரை, விகாஸ், விஜய் ஆகியோர் தாக்க முயற்சித்துள்ளனர். சுதாரித்துக் கொண்ட சிவபிரவீனும், ஜெயமுருகனும் செங்குளம் கிராமத்துக்குள் தப்பிச் சென்றனர். அப்போது, அங்கிருந்த சிலர் கற்களாலும், கட்டைகளாலும் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே விஜய் உயிரிழந்தார். பலத்த காயமடைந்த விகாஸ் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிவபிரவீன், ஜெயமுருகன் ஆகியோரை வீரவநல்லூர் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட விஜயின் உடலை பிரேத பரிசோதனைக்குப்பின் உறவினர்கள் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை.
விஜயின் தந்தை கண்ணன், தாய் மகாராணி மற்றும் உறவினர்கள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில், `இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும். விஜயின் உடலை எங்கள் ஊரிலேயே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் உடலை பெற்றுக்கொள்வோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.