செப்.1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்படுகிறது. நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களின் பராமரிப்பு, பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் ஆய்வு செய்தார். 
Regional01

செப்.1-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ள நிலையில் - நாமக்கல்லில் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு : 24 வாகனங்களின் அனுமதி ரத்து

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வருகிற செப்.1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் நாமக்கல், திருச்செங்கோட்டில் தனியார் பள்ளி வாகனங்களை வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் ஆய்வு செய்தனர். மொத்தம் 276 தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

தமிழகத்தில் செப்.1-ம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மட்டுமே திறக்கப்பட உள்ளது. இதையொட்டி பள்ளி, கல்லூரி பேருந்து, வேன் உள்ளிட்ட வாகனங்கள் முறையாக பராமரிப்பு செய்யப்பட்டுள்ளதா என நாமக்கல், திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது.

நாமக்கல்லில், நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்வதற்கான முகாம் அமைக்கப்பட்டிருந்தது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தார். அப்போது பள்ளி வாகனங்களின் படிக்கட்டு, முதலுதவிப் பெட்டகம், அவசர வழி போன்ற பாதுகாப்பு வசதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யும்படி வட்டாரப் போக்குவரத்து துறையினருக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இதன்படி நேற்று ஒரே நாளில் 126 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இவற்றில் 24 வாகனங்களில் வசதி குறைபாடு இருந்ததால் அவற்றை இயக்குவதற்கான அனுமதி ரத்து செய்யப்பட்டது.

இந்த வாகனங்கள் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்னர் சாலையில் இயக்க அனுமதிக்கப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக கோட்ட தீயணைப்புத்துறை சார்பில் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுநர்களுக்கு தீ தடுப்பு, பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. இதுபோல் திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் மூலம் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் 150 தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

நாமக்கல் துணை ஆட்சியர் எம்.கோட்டைக்குமார், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் முருகன், முருகேசன், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT