Regional02

என்ஜின் ஆயிலுடன் டேங்கர் லாரியை கடத்த முயற்சி : விழுப்புரத்தைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப்பதிவு

செய்திப்பிரிவு

சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள பெட்ரோலியம் கம்பெனியில் இருந்து, வாகனங்களுக்கு பயன்படுத்தப்படும் 20 ஆயிரம் லிட்டர் என்ஜின் ஆயில் டேங்கர் லாரியை மதுரை வண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த விமல்காந்தன் (40) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் கண்டமங்கலம் அருகே பள்ளித்தென்னல் பகுதிக்கு வந்தபோது பைக்கில் வந்த நபர் தன்னை போலீஸ் என அறிமுகப்படுத்திக்கொண்டு லாரியை சோதனை செய்ய வேண்டும் என்றார். லாரியை நிறுத்திய விமல் காந்தனை கத்திமுனையில் மிரட்டிய அந்த நபர் லாரியை விழுப்புரம் நோக்கி ஓட்டச் சொன்னார். அதன்படி விமல் காந்தன் லாரியை ஓட்டியபோது மதகடிப்பட்டில் மேலும் 2 பேர் லாரியில் ஏறிக்கொண்டனர்.

பின்னர் விழுப்புரம் புறவழிச்சாலையில் லாரியை நிறுத்திய மர்ம நபர்கள் என்ஜின் ஆயிலை விற்பது தொடர்பாக செல்போனில் பேசிக் கொண் டிருந்தனர்.

இதற்கிடையில் ஓட்டுநர் விமல் காந்தன் அவசர போலீஸூக்கு தகவல் கொடுத்தார். உடனே விக்கிரவாண்டி போலீஸார் அங்கு விரைந்து வந்தபோது லாரியை கத்திமுனையில் கடத்தி வந்த 3 பேரும் தப்பியோடினர். இதையடுத்து போலீஸார் லாரியை மீட்டு கண்டமங்கலம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் விழுப்புரத் தைச் சேர்ந்த ரிஷாந்த் என்பவர் தனது 3 நண்பர்களுடன் சேர்ந்து என்ஜின் ஆயிலுடன் டேங்கர் லாரியை கடத்தியது தெரியவந்தது. அவர்களைத் தேடி வருகின்றனர். கடத்த முயன்ற லாரி மற்றும் என்ஜின் ஆயிலின் மதிப்பு ரூ.40 லட்சம் என கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT