Regional02

அறுவை சிகிச்சையின் போது பெண் உயிரிழப்பு - மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி மறியல் :

செய்திப்பிரிவு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் மனைவி ராணி(28). இவருக்கு கடந்த 2018-ல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், அங்கு குடும்பக்கட்டுப்பாடும் செய்யப்பட்டது.

அதன்பின், கைக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டில் தங்கி இருந்த ராணி மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். இதையடுத்து புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்து சிசுவை அகற்ற முயன்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக ராணி உயிரிழந்தார்.

இந்நிலையில், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ராணியின் குடும்பத்தினருக்கு அரசு நிவாரண தொகையை உடனே அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மருத்துவக் கல்லூரி அருகே ராணியின் உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். நடவடிக்கை எடுப்பதாக மருத்துவக் கல்லூரி முதல்வர் மு.பூவதி மற்றும் கணேஷ்நகர் போலீஸார் உறுதியளித்ததையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.

SCROLL FOR NEXT