Regional02

அகவிலைப்படி உயர்வை வழங்கக் கோரி - ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் :

செய்திப்பிரிவு

அகவிலைப்படி வழங்கக் கோரி திருச்சி, கரூரில் ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் நேற்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் மூ.தியாகராஜன் தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு வழங்கியதுபோல தமிழக அரசும் 01.07.2021 முதல் 11 சதவீத அகவிலைப் படி உயர்வை வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவேண்டும். 70 வயதான ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப நல நிதியை ரூ.3 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் மு.ஆறுமுகம், மாநில துணைத் தலைவர் ச.தங்கவேலு, மாவட்டச் செயலாளர் ப.கிருஷ்ணன், மாவட்டப் பொருளாளர் கே.சவேரியார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.சம்பத்குமார் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மாநில துணைத்தலைவர் கே.எஸ்.பிச்சுமணி, வட்டாரச் செயலாளர்கள் கரூர் வி.பீட்டர், அரவக்குறிச்சி கே.முத்துசாமி, கிருஷ்ணராயபுரம் ஆர்.சீதாபதி, குளித்தலை எ.ஏழுமலை, கடவூர் பிச்சை ஆரோக்கியம் ஆகியோர் விளக்க உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் கே.காத்தமுத்து வரவேற்றார். மாவட்டப்பொருளாளர் கே.கே.ராமசாமி நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT