தங்க நகைகளுக்கு தனி ஹால்மார்க் அடையாள எண் கட்டாயமாக்குவதைக் கண்டித்து நேற்று காலை 2 மணி நேரம் நகைக் கடைகளை அடைத்து போராட்டம் நடைபெற்றது.
தங்க நகைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் அனைத்து நகைகளிலும் 6 இலக்கம் உள்ளதனி ஹால்மார்க் அடையாள எண்ணை (எச்யுஐடி) பதிவு செய்யவேண்டும் என இந்திய தர நிர்ணய ஆணையம் (பிஐஎஸ்) அறிவித்துள்ளது. இதன்மூலம் தங்க நகை எங்கு உருவாக்கப்படுகிறது? யார் மூலம் விற்பனை செய்யப்படுகிறது? யார் வாங்குகிறார்கள்? என்பதை அறிந்து கொள்ள முடியும் என்பதால் நகைக்கடை உரிமையாளர்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், சென்னையில் தி.நகர், புரசைவாக்கம், பிராட்வே உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் நேற்று காலை 9 மணி முதல் 11 மணி வரை கடைகளை அடைத்து அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். நகைக் கடைகளுக்கு முன்பு பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்தில் பங்கேற்றனர்.
இதுதொடர்பாக சென்னை நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் உதய் உம்மிடி கூறும்போது, ‘‘தரத்துக்காக ஹால் மார்க் முத்திரை பதிப்பதை எதிர்க்கவில்லை. தனி ஹால்மார்க் அடையாள எண்ணை கொண்டு வரவேண்டும் என தர நிர்ணய அமைப்பு தன்னிச்சையாக எடுத்தஇந்த முடிவை எதிர்க்கிறோம். இதனால், பாரம்பரிய நகைக் கடைகள் காணாமல் போகும். பெரிய,பெரிய முதலீட்டாளர்கள் மட்டுமே இத்தொழிலில் இருக்கும் நிலை ஏற்படும். எனவே, தேசியஅளவில் கடையடைப்பு போராட்டம் நடத்தினோம். நாடு முழுவதும்2 லட்சம் கடைகள் மூடப்பட்டன.எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம்அறிவிப்போம்’’ என்றார்.