கரோனா பரவல் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கிவைத்தார். உடன் எம்பி பார்த்திபன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி உள்ளிட்டோர். 
Regional01

துணை சுகாதார நிலையங்களில் - பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள 505 துணை சுகாதார நிலையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய அரசின் கள விளம்பரத்துறை சார்பில் கரோனா விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:

சேலம் மாவட்டத்தில் இதுவரை 31 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மாவட்டத்தில் தற்போது நாள்தோறும் 138 மையங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள 505 துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அனைத்து ஊராட்சிப் பகுதிகளிலும் தடுப்பூசி மையம் அமைவதால் பொதுமக்கள் தங்களது குடியிருப்புக்கு அருகில் உள்ள மையங்களில் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள முடியும்.

செப்டம்பர் 1-ம் தேதி முதல் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் ஆசிரியர்களுக்கு அந்தந்த வட்டாரங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் நாளை (25-ம் தேதி) முதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அங்கன்வாடி பணியாளர்கள், ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் என பல்வேறு தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரச்சார வாகனம் சேலம் மாநகராட்சி பகுதிகள் மற்றும் ஓமலூர், வீரபாண்டி, மேச்சேரி உள்ளிட்ட ஊர்கள் மற்றும் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள கிராமங்களில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எம்பி பார்த்திபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேலத்தில் 24 மணி நேர தடுப்பூசி மையம்

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 24 மணி நேர கரோனா தடுப்பூசி மையத்தை மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தி நேற்று தொடங்கி வைத்து கூறியதாவது:

சேலம் அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. பின்னர் தொற்று பரவல் அதிகரித்ததால், மருத்துவமனை வளாகத்தில் நெரிசலை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் பணி மே 16-ம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.

தற்போது, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சேலம் சுகாதார மாவட்ட துணை இயக்குநர் நளினி, மாநகர நல அலுவலர் யோகானந்த், ஆர்எம்ஓ ராணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT