நாட்றாம்பள்ளி அடுத்த மல்லகுண்டா ஊராட்சியில் தகரகுப்பன் சாலை முதல் வண்டிமேடு வரை அமைக்கப்பட்ட தார்ச்சாலையை நேற்று ஆய்வு செய்த திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா. 
Regional01

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் - தார் சாலை பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் முடிக்கப்படும் : ஆட்சியர் அமர் குஷ்வாஹா தகவல்

செய்திப்பிரிவு

திருப்பத்தூர் மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.16.85 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம் பள்ளி ஒன்றியம், மல்லகுண்டா ஊராட்சிக்கு உட்பட்ட தகரகுப்பன் சாலை முதல் வண்டிமேடு வரை தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் குமர் குஷ்வாஹா கூறும்போது, ‘‘தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2020-21-ன் கீழ் 11 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பில் தகரகுப்பன் சாலை முதல் வண்டிமேடு வரை சுமார். 1,200 கி.மீட்டர் தொலைவுக்கு தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த ஜனவரி மாதம் தொடங்கியது. இப்பணிகள் கடந்த மே மாதம் முடிக்கப்பட்டது. இச்சாலையால் தகரகுப்பன் மற்றும் வண்டிமேடு கிராமத்தைச் சேர்ந்த மக்கள் பயனடைந்துள்ளனர். இச்சாலை தரம் வாய்ந்ததாக அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்யப் பட்டுள்ளது.

மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2020-21-ன் கீழ் திருப்பத்தூர், கந்திலி, நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை, ஆலங்கயம், மாதனூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.16.85 கோடி மதிப்பில் சுமார் 59 தார்ச்சாலைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 16 இடங்களில் பணிகள் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள 43 தார்ச்சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அப்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் செல்வகுமரன், உதவி செயற்பொறியாளர் பழனிசாமி, பிடிஓ ரகுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT