தமிழகம் முழுவதும் இன்று திரையரங்குகள் திறக்கப்படுகிறது. இதையடுத்து, சேலம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள திரையரங்கில் இருக்கைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது. படம்: எஸ்.குரு பிரசாத் 
Regional01

ஈரோட்டில் 26-ம் தேதி திரையரங்குகளை திறக்க முடிவு : உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

ஈரோட்டில் திரையரங்குகளை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தும் பணி நடந்து வருவதாகவும், 26-ம் தேதி முதல் திரைப்படங்களைத் திரையிட திட்டமிட்டுள்ளதாகவும் சினிமா திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 23-ம் தேதி முதல் திரையரங்குகள் மூடப்பட்டன. தற்போது தொற்று குறைவு காரணமாக தளர்வு அறிவிக்கப்பட்டு, 50 சதவீதம் பார்வையாளர்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, திரையரங்குகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. திரையரங்குகள் திறப்பு குறித்து, ஈரோடு மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் செந்தில்நாதன் கூறியதாவது:

ஈரோடு மாவட்ட அளவில் 50 திரையரங்குகளும், நகர் பகுதியில் 11 திரையரங்குகளும் உள்ளன. ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகளைத் திறக்க முழுவீச்சில் ஏற்பாடு செய்து வருகிறோம். ஊழியர்கள் அனைவரும் கரோனாதடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதை உறுதி செய்துள்ளோம். திரையரங்கிற்கு வரும் மக்களுக்கு வாசலில்உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து, கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தப்படுத்திய பிறகே அனுமதிக்க உள்ளோம்.

அரசு அறிவித்துள்ள வழிகாட்டுநெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற முடிவு செய்துள்ளோம். 23-ம் தேதி (இன்று) முதல் திரையரங்குகளைத் திறக்க அரசு அனுமதித்து இருந்தாலும், மாநிலம் முழுவதும் உள்ள விநியோகஸ்தர்கள், தலைமை சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளது.

அந்த கூட்டத்தில், எந்த படம் திரையிட தயாராக உள்ளது, அதில், எந்த படத்தை தமிழகம் முழுவதும் திரையிடுவது என முடிவு செய்து, அதன் அடிப்படையில், ஒரே நேரத்தில் தியேட்டர்களில் புதிய படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26-ம் தேதி அல்லது 27-ம் தேதியில் ஈரோடு மாவட்ட திரையரங்குகளில் படங்களை வெளியிட முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT