சேலம் மாவட்டத்தில் அனுமதி பெறாத குடிநீர் இணைப்புகளை அகற்ற வேண்டும் என ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
சேலம் மாவட்டத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆய்வுக் கூட்டம் சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. எஸ்பி அபிநவ், கூடுதல் இயக்குநர் (வளர்ச்சி) ஷேக் அப்துல் ரஹமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியர் கார்மேகம் பேசியதாவது:
அடிப்படை தேவையான குடிநீரை அனைத்து இடங்களில் உள்ள பொதுமக்களின் தேவைக்கேற்ப தடையின்றி விநியோகம் செய்ய முன்னுரிமை கொடுத்து துரிதமாக பணிபுரிய வேண்டும். அனுமதியில்லாத குடிநீர் இணைப்புகளை அகற்ற குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், காவல்துறையினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மூலம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர் விநியோகம் பாதிக்காத வகையில் மின் வாரியம், குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவை மாதாந்திர பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் சந்திரசேகர், நிர்வாக பொறியாளர்கள் குணசேகரன், செங்கோடன், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) (பொ) கணேசமூர்த்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மணிவாசகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.