ஏற்காடு ஏரியில் இன்று முதல் பயணிகள் படகு சவாரிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று படகுகளுக்கு வண்ணம் தீட்டி பராமரிப்பு பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள். 
Regional02

5 மாதங்களுக்கு பின்னர் - ஏற்காடு ஏரியில் இன்று முதல் படகு சவாரிக்கு அனுமதி :

செய்திப்பிரிவு

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக மூடப்பட்டிருந்த ஏற்காடு படகுத்துறையில் 5 மாதங்களுக்கு பின்னர் இன்று (23-ம் தேதி) முதல் பயணிகள் படகு சவாரிக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோது ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், சேலம் மாவட்டத்தில் கரோனா தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியதால், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. மற்ற நாட்களில் ஏற்காடு வருபவர்கள் கரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருக்க வேண்டும் அல்லது கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.

தளர்வுகளும், கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டாலும் ஏற்காடு படகுத்துறை உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில், இன்று முதல் (23-ம் தேதி) கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஏற்காடு ஏரி படகுத்துறையில் பயணிகள் படகு சவாரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சுற்றுலாத் துறை சார்பில் ஏற்காடு ஏரியில் படகு சவாரிக்கான ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதுதொடர்பாக சுற்றுலாத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஏற்காட்டில் பயணிகள் படகு சவாரிக்காக படகு இல்லத்தில் மிதி படகுகள், துடுப்புப் படகுகள், மோட்டார் படகுகள் உள்ளிட்ட 65 படகுகள் பராமரிக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டுள்ளது.

மேலும், படகு நிறுத்தும் இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. படகு சவாரிக்கு வரும் பயணிகள் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றும் வகையில், சமூக இடைவெளி கோடுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே கிருமிநாசினி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏரியில் படர்ந்திருந்த ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT