தடையை மீறி மது அருந்த அனுமதித்த ஓட்டலுக்கு ஈரோடு மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், மதுபானக் கூடங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஈரோடு அருகே சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தனியார் ஓட்டலில் தடையை மீறி வாடிக்கையாளர்கள் மது அருந்த அனுமதிப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து, வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஓட்டலில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், மது அருந்த அனுமதியளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஓட்டலுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்ததுடன் அபராதமும் விதித்தனர். மேலும், இதுபோல் புகார் தெரியவந்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.