வாழப்பாடி அருகே காரில் கடத்த முயன்ற சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள யானை தந்தங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 5 பேரை கைது செய்து தந்தங்களை விலைக்கு வாங்க வந்தவர்கள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இருந்து யானை தந்தங்கள் கொண்டு வரப்பட்டு கோவையில் விற்பனை செய்யப்பட உள்ளதாக கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், உதவி வனப் பாதுகாவலர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறை தனிப்படைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட வனத்துறையினர், சேலம் மாவட்ட வன அலுவலர் முருகன், வாழப்பாடி வனச்சரகர் துரை முருகன் உள்ளிட்டோருக்கு தகவல் அளித்தனர்.
மேலும், வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி சுங்கச் சாவடி பகுதியில் இரு மாவட்ட வனத்துறையினரும் இணைந்து நேற்று முன்தினம் இரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கோதுமலை தெற்கு வனப்பகுதி வழியாக காரில் வந்த கும்பலை மடக்கிப் பிடித்து காரில் சோதனை செய்தனர். இதில், 5 மற்றும் 6.150 கிலோ எடையுள்ள இரு யானை தந்தங்கள் இருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், யானை தந்தங்களை கடத்தி வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம் விளக்கூரைச் சேர்ந்த சசிகுமார் ( 22), ராமநாதபுரம் மாவட்டம் புழுதிகுளம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் (24), சேலம் மாவட்டம் மேட்டூர் தங்கமாபுரிபட்டணம் பரத் (23), வீரக்கல்புதூர் பிரவீன்குமார் (21), மாதையன்குட்டை சேட்டு ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்களின் மதிப்பு சுமார் ரூ.30 லட்சமாகும். மேலும், தந்தங்கள் கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது தொடர்பாகவும், தந்தங்களை வாங்க வந்தவர்கள் குறித்தும் கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.