பெரியகடைவீதி, ஒப்பணக்கார வீதி, காந்திபுரம், பீளமேடு, ஆவாரம்பாளையம் சாலை, மகளிர் பாலிடெக்னிக் சாலை, பாரதியார் சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபாதைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, பெரியகடைவீதியில் டவுன்ஹாலில் இருந்து உக்கடம் செல்லும் வழித்தடத்தில் சாலையின் இருபுறமும் நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஒரு புறம், அரசு அலுவலகங்கள் உள்ளன. அதன் சுவர்களை ஒட்டியவாறு தேநீர் கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேநீர் கடைகளுக்கு வருபவர்கள் நடைபாதையையும், அருகேயுள்ள பேருந்து நிறுத்தத்தின் இருக்கைகளையும் ஆக்கிரமித்துக் கொள்கின்றனர். மறுபுறம் உள்ள சாலையில் வாகனங்களை நடைபாதையில் நிறுத்திச் செல்கின்றனர். மகளிர் பாலிடெக்னிக் சந்திப்பில் இருந்து ஆவாரம்பாளையம் செல்லும் வழித்தடத்தில் பெட்ரோல் பங்க் எதிரேயுள்ள நடைபாதை பகுதியும், காந்திபுரம் செல்லும் வழியிலுள்ள பாரதியார் சாலை நடைபாதை பகுதியும் கடைக்காரர்களின் ஆக்கிரமிப்பிலும், வாகனங்களின் ஆக்கிரமிப்பிலும் உள்ளன. இதனால் பாதசாரிகள் சாலையில் இறங்கி நடந்து செல்ல வேண்டியுள்ளது.
மாநகர காவல்துறையினர் நடைபாதையில் வாகனங்களை நிறுத்திச் செல்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மாநகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.