முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77-வது பிறந்த நாளையொட்டி அவரது படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 77-வது பிறந்த நாள் நேற்றுநாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தியின் படத்துக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் எம்.கிருஷ்ணசாமி, கே.வீ.தங்கபாலு, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஆ.கோபண்ணா, மத்திய சென்னை கிழக்கு மாவட்டத் தலைவர் சிவ.ராஜசேகரன் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சத்தியமூர்த்தி பவனில் 77 கிலோ கேக் வெட்டப்பட்டது.
சைதாப்பேட்டை சின்னமலையில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், கே.வீ.தங்கபாலு, கு.செல்வப்பெருந்தகை, சிவராஜசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.