Regional03

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் - சீனியர்கள் புறக்கணிப்பு : ரசிகர்கள் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுதொடர்பாக விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான தொட்டியம் கே.பாரதிராஜா, துறையூர் எஸ்.சிவா,மண்ணச்சநல்லூர் எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர், திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:

நடிகர் விஜய் ரசிகர்களாகிய நாங்கள், விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமையின் ஒத்துழைப்புடன் கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு நலத் திட்டங்களை செய்து வருகிறோம். இதனிடையே, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத் தலைவராக இருந்த ஆர்.கே.ராஜாவை, இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் புஸ்ஸி என்.ஆனந்த் கடந்த ஆண்டு நீக்கினார்.

அதன்பிறகு, திருச்சி 11 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், இயக்கத்தில் பல ஆண்டுகளாக உள்ள பலரும் புறக்கணிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் இதேநிலைதான் உள்ளது. இதுகுறித்து தனித்தனியாகவும், குழுவாகவும் தலைமைக்குத் தகவல் தெரிவிக்க முயன்றும் முடியவில்லை.

இதுதவிர, நடிகர் விஜய் பெயர், படத்தை நாங்கள் பயன்படுத்தக் கூடாது என்று கூறி வருவதுடன், பயன்படுத்துவோர் மீது போலீஸில் புகார் கொடுத்தும் வருகின்றனர். இந்தப் பிரச்சினைகள் அத்தனைக்கும் புஸ்ஸி ஆனந்த்தான் காரணம். ஆனால், இந்தப் பிரச்சினைகள் எல்லாம் நடிகர் விஜய்க்கு தெரியாது. இதை நாங்கள் கூறுவதால் எங்களுக்குப் பாதிப்பு வரலாம். அப்படி ஏதாவது நேரிட்டால் அதற்கு புஸ்ஸி என்.ஆனந்த் தூண்டுதலே காரணமாக இருக்கும்.

எனவே, இதைக்கண்டித்து, திருச்சியில் ஆக.22, 23 ஆகிய தேதிகளில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தரும் புஸ்ஸி ஆனந்த்துக்கு கருப்புக் கொடி காட்ட திட்டமிட்டுள்ளோம் என்றனர்.

SCROLL FOR NEXT