Regional02

தாதுமணல் ஏற்றி வந்த லாரி சிக்கியது : தூத்துக்குடி குடோன்களில் ஆட்சியர், எஸ்பி ஆய்வு

செய்திப்பிரிவு

தூத்துக்குடியில் தாதுமணல் ஏற்றி வந்த லாரி பிடிபட்டதால், குடோன்களில் ஆட்சியர், எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி பகுதியில் உள்ள தனியார் பெயின்ட் தயாரிக்கும் நிறுவனத்துக்கு நேற்று மாலை லாரி ஒன்று வந்தது. அந்த லாரியில் இல்மனைட் தாதுமணல் கடத்தி வரப்படுவதாக சிப்காட் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் அந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில் சுமார் 9 டன் தாதுமணல் இருந்தது. தொடர்ந்து அந்த நிறுவனத்தில் போலீஸார் சோதனை செய்தனர். அங்கு மேலும் 4 லாரிகளில் கொண்டு வரப்பட்ட தாதுமணல் வைக்கப்பட்டிருந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ்,எஸ்பி ஜெயக்குமார், கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் அந்த நிறுவனத்துக்கு சென்றுவிசாரணை நடத்தினர்.

தாதுமணல் கொண்டு செல்வதற்கான ஆவணங்கள் உள்ளதா, உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தினர். தாதுமணல் மாதிரி சேகரிக்கப்பட்டு மதுரையில் உள்ளஆய்வகத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த 2013-ம் ஆண்டு தூத்துக்குடி, முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாதுமணல் வைத்திருந்த சில குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனை எடுப்பதற்கு இதுவரை அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த குடோன்களில் இருந்து தாதுமணல் எடுத்து வரப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஆட்சியர் மற்றும் எஸ்பி ஆகியோர் அந்த குடோன்களுக்கு சென்று ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு இரவு வரை நீடித்தது.

கடந்த 2013-ம் ஆண்டு தூத்துக்குடி, முத்தையாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தாதுமணல் வைத்திருந்த சில குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

SCROLL FOR NEXT