வரும் 27-ம் தேதிக்குள் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து பேசும்போது, "தமிழகத்தில் செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதைத்தொடர்ந்து, பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் கரோனா தடுப்புப்பணிகள் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். வகுப்பறைகள் அனைத்தும் தூய்மையாக இருக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும். ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை மாணவர்களும், ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும்.
பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பத்தை பரிசோதனை செய்ய வேண்டும். கிருமி நாசினி மாணவர்களுக்கு வழங்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி 2 தவணையும் கட்டாய மாக செலுத்தியிருக்க வேண்டும். வரும் 27-ம் தேதிக்குள் அனைத்து பள்ளிகளிலும் கரோனா தடுப்பு முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் முழுமையாக முடிந்திருக்க வேண்டும். அதை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்’’ என்றார்.
இக்கூட்டத்தில், டிஆர்ஓ தங்கைய்யாபாண்டியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன்ராஜசேகர், வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியன், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.