தேவை அதிகரித்ததால், சேலத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.2,000-க்கு விற்பனையானது.
ஓணம் பண்டிகை, வரலட்சுமி விரதம், ஆவணி மாத முகூர்த்த நாட்கள் ஆகியவற்றின் காரணமாக, பூக்களின் தேவை அதிகரித்து, அவற்றின் விற்பனையும், விலையும் அதிகரித்துள்ளது. சேலம் வஉசி மார்க்கெட்டில் ஒரு கிலோ குண்டு மல்லி ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது. இதர பூக்களும் வழக்கமான விலையைக் காட்டிலும் 4 மடங்கு அதிகரித்திருந்தது.
இது குறித்து பூ மார்க்கெட் வியாபாரிகள் கூறியதாவது:
கரோனா ஊரடங்கு காரணமாக, பூ மார்க்கெட் அடிக்கடி மூடப்பட்டு வந்ததால், பூ வியாபாரிகள் மலர் சாகுபடியை குறைத்துக் கொண்டனர். இதனால், சேலம் பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வருகை குறைந்துவிட்டது. இந்நிலையில், ஓணம் பண்டிகை, வரலட்சுமி விரதம் உள்ளிட்ட காரணங்களால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. மேலும், ஓணம் பண்டிகைக்கு அத்தப்பூ கோலமிடத் தேவையான பூக்களை வாங்கிச் செல்வதற்கு, கேரள மாநில வியாபாரிகளும் வந்துள்ளனர். இதுபோன்ற காரணங்களால், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. ஆனால், சந்தைக்கு பூக்கள் வரத்து குறைவாகவே இருந்தது.
எனவே, ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.2 ஆயிரம், சன்னமல்லி கிலோ ரூ.700, கனகாம்பரம் ரூ.1,200, ஜாதி மல்லி ரூ.500, சம்பங்கி ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.320 என அனைத்துப் பூக்களின் விலையும் அதிகரித்துவிட்டது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வண்ண சாமந்தி பூக்கள், பன்னீர் ரோஸ் உள்ளிட்டவை எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு உள்ளிட்ட நகரங்களுக்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனர். எனினும், கடந்த ஆண்டு 16 டன் பூக்கள் ஓணத்தை முன்னிட்டு விற்பனையானது. தற்போது 6 டன் பூக்கள் மட்டுமே விற்பனையானது என்றனர்.