Regional01

ரேஷன் கடைகளுக்கு ரூ.53,225 அபராதம் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு ரேஷன் கடைகளில் அலுவலர்கள் குழு நடத்திய ஆய்வின்போது குறைபாடு களுக்காக ரூ.53,225 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சார் ஆட்சியர் உட்பட 12 துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கூட்டுறவு சார்பதிவாளர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் உள்ளிட்ட 106 அலுவலர்கள் கொண்ட குழுவினர், திருநெல்வேலி மாவட்ட ரேஷன் கடைகளில் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அதில் பல்வேறு குறைபாடுகளுக்காக ரூ.53,225 அபராதமாக விதிக்கப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு கூறியிருப்பதாவது:

இதுபோன்று ஒரேநேரத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் திடீர் ஆய்வு செய்யப்படும். ரேஷன் கடைகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யப்படும். பொதுமக்கள் ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெறுவதில் ஏற்படும் சிரமங்களை களைவதற்கு, ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு புகார்களை தெரிவிக்கலாம்.

புதிய மின்னணு குடும்ப அட்டை பெறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் நேரடியாகவோ அல்லது இ.சேவை மையம் மூலமாக வோ விண்ணப்பிக்கலாம். புதிய குடும்ப அட்டைகள் வேண்டி விண்ணப்பிக்கப் படும் மனுக்கள் உரிய அலுவலரால் விசாரணை செய்யப்பட்டு குடும்ப அட்டைகள் வழங்கப்படும். மேலும் குடும்ப அட்டை தொடர்பான புகார்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டுவரும் பொது விநியோகத் திட்ட கட்டுப்பாட்டு அறை எண் 93424 71314 என்ற எண்ணுக்கு தொலைபேசி மூலமும், வாட்ஸ் அப் மூலமும் தெரிவிக்கலாம்.

SCROLL FOR NEXT