Regional01

நீர் வரத்து 4,023 கனஅடியாக குறைந்தது - மேட்டூர் அணை நீர் மட்டம் ஒரு வாரத்தில் 5.88 அடி குறைந்தது :

செய்திப்பிரிவு

மேட்டூர் அணை நீர் மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 5.88 அடி குறைந்தது.

தென்மேற்கு பருவமழைக் காலத்தில், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும். தற்போது பருவமழைக் காலம் நீடிக்கும் நிலையிலும், கர்நாடக அணைகளில் இருந்து அதிகளவில் தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால், மேட்டூர் அணைக்கு மிகக்குறைந்த அளவே நீர் வரத்து காணப்படுகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 4 ஆயிரத்து 379 கனஅடியாக இருந்த நீர் வரத்து , நேற்று விநாடிக்கு 4 ஆயிரத்து 23 கனஅடியாக குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியும், மேட்டூர் கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 700 கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

நீர்வரத்தை விட, நீர் திறப்பு அதிகமாக இருப்பதால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது. கடந்த 11-ம் தேதி மேட்டூர் அணையின் நீர் மட்டம் 73.97 அடியாக இருந்தது. ஒரு வார இடைவெளியில் அணையின் நீர் மட்டம் 5.88 அடி குறைந்துள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம் 68.09 அடியாகவும், நீர் இருப்பு 31.08 டிஎம்சி-யாகவும் உள்ளது.

டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு ஜூன் 12-ம் தேதி முதல் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், வரும் ஜனவரி 28-ம் தேதி வரை நீர் திறப்பு நீடிக்க வேண்டும். அணையில் நீர் இருப்பு குறைந்து வரும் நிலையில், காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் போதிய மழை பெய்து, கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீர் திறக்கப்பட்டால் மட்டுமே, டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்கு உரிய காலம் வரை நீர் திறக்க முடியும் என்ற நிலை தற்போது நிலவுகிறது.

SCROLL FOR NEXT