தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஊராட்சித் தலைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஏரல் அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன் சீலன் (45). இவர், அகரம் ஊராட்சி தலைவராகவும், வைகுண்டம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவராகவும் இருந்து வந்தார். கடந்த 16-ம் தேதி நடைபெற்ற தூத்துக்குடி- நாசரேத் சிஎஸ்ஐ கிறிஸ்தவ திருமண்டலத் தேர்தலில் சபை பெருமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார். இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர்.
அகரம் கிராமத்தில் உள்ள கோயிலில் நேற்று கொடை விழா நடைபெற்றது. இதனால், ஊராட்சி துணைத்தலைவர் தவசிக்கனி வீட்டுக்கு கறி விருந்து சாப்பிட நேற்று மதியம் பொன்சீலன் சென்றுள்ளார். அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து பொன்சீலனை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் பொன்சீலன் உயிரிழந்தார். மாவட்ட எஸ்பி எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
கடந்த 2017-ம் ஆண்டு அகரம் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் பொன்சீலன் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். உள்ளாட்சி தேர்தலின்போது பொன்சீலனை எதிர்த்து லெனினின் மனைவி போட்டியிட்டுள்ளார். இதில் பொன்சீலன் வெற்றிபெற்றார். அதுபோல், கடந்த 16-ம் தேதி நடைபெற்ற சிஎஸ்ஐ திருமண்டலத் தேர்தலில் இவரை எதிர்த்து, லெனின் ஆதரவாளரான ஜெபஸ்டின் போட்டியிட்டுள்ளார். அதிலும் பொன்சீலனே வெற்றி பெற்றுள்ளார். இவ்விவகாரத்தில் கொலை நடைபெற்றிருக்கலாம் என, போலீஸார் தெரிவித்தனர்.
அகரம் வடக்கு தெருவைச் சேர்ந்த ஜெயசீலன் மகன்கள் ஜெபசிங் சாமுவேல் (30), ஜெபஸ்டின் (25), அகரம் தெற்கு தெருவைச் சேர்ந்த வெள்ளப்பழம் மகன் மாரிமுத்து (26), ராஜா மகன் பெனித் (23) ஆகிய 4 பேரை, ஏரல் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.