ஈரோடு மாவட்டம் கொடிவேரி அணை பாசனத்துக்கு உட்பட்ட தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன பகுதிகளில், உணவு தானியக் கழகத்தின் மூலமாக, ஆண்டுதோறும் மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் முகவராக தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் கொள்முதலில் ஈடுபட்டு வருகிறது.
கொடிவேரி பாசனப்பகுதியில் அடுத்த மாதம் முதல் நெல் அறுவடை தொடங்கும் நிலையில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை தொடங்குவது தொடர்பாக முடிவுகளை மேற்கொள்ள ஈரோடு ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மாவட்ட மேலாளர், மாவட்ட கூட்டுறவு சங்க பதிவாளர், தடப்பள்ளி- அரக்கன்கோட்டை பாசன விவசாய சங்கத்தின் தலைவர் சுபி.தளபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி தலைமையில் நேற்று நடந்தது. எத்தனை இடங்களில் நெல் கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும், எந்த தேதியில் தொடங்க வேண்டும், விதிமுறைகள், விவசாயிகள் மற்றும் கொள்முதல் நிலைய ஊழியர்கள் செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், செம்டம்பர் மாதம் முதல் நெல் கொள்முதல் மையங்களைத் தொடங்க வேண்டுமென சுபி. தளபதி கோரிக்கை விடுத்தார். அதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.