ஈரோடு மாவட்டத்தில் மக்களின் ஆசி பெறும் யாத்திரையில் ஈடுபட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
ஈரோடு மாவட்டம் அறச்சலூர் அருகே உள்ள நல்லமங்காபாளையத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லானின் உருவப் படத்திற்கு மத்திய அமைச்சர் முருகன் நேற்று மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பொல்லான் வாழ்க்கை வரலாறு புத்தகத்தையும் அவர் வெளியிட்டார்.
அறச்சலூர் கைகாட்டி சந்திப்பு பகுதியில் பாஜக சார்பில், எல்.முருகனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
நாடு சுதந்திரம் பெற்ற பிறகு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 12 பேரை பிரதமர் மோடி மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த என்னை பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தும்போது, திமுக கூட்டணி கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி உண்மையான சமூகநீதியை பிரதமர் மோடி நிலைநாட்டியுள்ளார், என்றார்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசும்போது, வேல் யாத்திரை நடத்தியபோது, தமிழகத்தில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாது என திமுக கூறியது. இப்போது மொடக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளில் வென்றுள்ளோம். திமுக பொய்யான சமூக நீதியை வலியுறுத்தி வருகிறது. பாஜகதான் உண்மையான சமூக நீதியை அமல்படுத்தி வருகிறது, என்றார்.
ஈரோடு காளைமாடு சிலை மற்றும் வீரப்பன்சத்திரத்தில் அவருக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி, மாநில பொதுக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.