தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி 1 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்க விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.
ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தொடங்கி வைத்து பேசும்போது,“ மாவட்ட நிர்வாகம் சார்பில் கரோனா பொதுமுடக்க காலத்திலும் ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ மூலம் வந்தகோரிக்கையின் படி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் இணைய வழியில் நடத்தப்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை 0461-2340159 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மாவட்டத்தில் ஆர்வமுள்ள 50 பேர் தேர்வு செய்யப்பட்டு போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தப்படுவார்கள்.
பயிற்சி வகுப்பில் சேரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில்18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இதுவரையில் 30 சதவீதம் பேர்தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 22 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகள்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா நடத்துவது குறித்து அறிவிக்கப்படும் என்றார். திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் மு.கோகிலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.